டொனால்ட் டிரம்ப் முதுகெலும்பில்லாதவர், அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான அதிபர்: அர்னால்டு ஸ்வாஸ்நேகர் காட்டம்

அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடமான கேப்பிட்டல் ஹில் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று டிரம்ப் பதவி விலக வேண்டும் என்று பிரதிநிதிகள் சபை கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவதற்குத் தயாராகி வருகிறது.
ஜனநாயக அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வரும் 20ம் தேதி அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கிறார். அவரது வெற்றியை உறுதி செய்யும் சடங்கு ஒன்று சமீபத்தில் நடந்தது, அது வெறும் சடங்குதான். இதேபோல் ஒவ்வொரு முறையும் நடப்பது வழக்கம் ஆகும். ஆனால் டிரம்பினால் அதைப் பொறுக்க முடியாமல் ஆதரவாளர்களை ஏவி விட்டு வன்முறையில் ஈடுபடச் செய்ததாக அமெரிக்காவில் கடும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
பல உலகத் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். டிரம்பை பதவி நீக்கம் செய்ய அதிகாரம் வழங்கும் 25வது சட்டத்திருத்தத்தை சபையில் கொண்டு வரப்போவதாக ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்நிகழ்ச்சி குறித்து ஹாலிவுட் நடிகரும், கலிபோர்னியா முன்னாள் கவர்னருமான அர்னால்ட் ஸ்வாஸ்னேகர் கூறியதாவது:
அதிபர் டிரம்ப், நியாயமான முறையில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளை தடுக்க முயன்றார். பொய்களால் மக்களை வழி நடத்த திட்டம் தீட்டினார். நாஜிக்கள் யூதர்களுக்கு எதிராக வெறியாட்டம் நடத்தினர்.
அதே போல் கடந்த 6ம் தேதி டிரம்ப் ஆதரவாளர்கள் ஜெர்மனி நாஜிகளுக்கு இணையான வன்முறை வெறியாட்டத்தை நடத்தினர். அமெரிக்க அதிபர் டிரம்ப் முதுகெலும்பற்றவர், தோல்வியடைந்த தலைவர், அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான அதிபர் என்ற பெயரைப் பெற்றுள்ளார்.இவ்வாறு தன் பங்கிற்கு குற்றச்சாட்டுகளை அடுக்கி கூறினார் அர்னால்ட் ஸ்வாஸ்நேகர்.