கிறிஸ்துவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மத போதகரான பால் தினகரன் “இயேசு அழைக்கிறார்” என்ற பெயரில் கிறிஸ்தவ மத பிரச்சாரக் கூட்டங்களை நடத்திவருகிறார். இவர் காருண்யா பல்கலைக்கழகம் மற்றும் காருண்யா கிறிஸ்டியன் ஸ்கூல் என்ற பெயரில் கல்வி நிறுவனங்களையும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இயேசு அழைக்கிறார் குழுமத்துக்கு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவிலான பணம் நன்கொடையாக வந்ததாகவும், அந்த நிதிகளுக்கு முறையாக வரி செலுத்தவில்லை என்றும் புகார் எழுந்தது.
மேலும் பல்கலைக்கழகத்திலும் முறைகேடாக வரி ஏய்ப்பு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து பால் தினகரனுக்குச் சொந்தமான 28 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.சென்னையில் பாரிமுனை, அடையாறு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
அதேபோல் கோவையில் உள்ள பால் தினகரனுக்கு சொந்தமான கோவை ஆலந்துறை அடுத்துள்ள காருண்யா பல்கலைக் கழகம் மற்றும் கோவை அவிநாசி சாலை அம்மன் குளம் பகுதியில் அமைந்துள்ள காருண்யா கிறிஸ்டியன் ஸ்கூல் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இன்று காலை 9 கார்களில் வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.